4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

jayalalitha
நான்காண்டு ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், செவ்வாய்க்கிழமை அவர் படித்தளித்த அறிக்கை:

தேசிய ஆசிரியர் கல்வியியல் மன்றமானது 15 புதிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எட்., பி.எஸ்.சி., பி.எட்., பாடப் பிரிவுகளும் அடங்கும். இந்த நான்கு ஆண்டு ஒருங்கிணந்த பாடப் பிரிவுகள், இந்த கல்வியாண்டு முதல் கல்வியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் திறனை மேம்படுத்த கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. எனவே, 5 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஒரு பெரும் கூட்டரங்கம் அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டப்படும்.

தொழிற்சாலைகளுக்காக மையம்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம், மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஏற்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு-பயிற்சி மையம் அமைக்கப்படும்.

சிறந்த திட்டங்களுக்கு காப்பீடு உரிமை பெறவும், நவீன கண்டுபிடிப்புகள் சார்ந்த தகவல்களைப் பாதுகாக்கும் மையம் பற்றி விழிப்புணர்வு, தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஆராய்ச்சி-தகவல்களைப்பெறுதல் ஆகிய அனைத்தும் இந்த மையத்தின் மூலம் அளிக்கப்படும்.

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தால் அளிக்கப்பட்டு வரும் கல்விச் சேவையை மாணவர்கள் எளிதில் பெறும் வகையில், இரண்டு புதிய மண்டல மையங்கள் விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும்.

மதுரை காமராஜர் பல்கலை.:

மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம் 77 துறைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. அங்கு நலவாழ்வு மையமும் செயல்பட்டு வருகிறது. இதனை 100 கிராமங்களைச் சேர்ந்தோர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, அங்கு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும்.

விளையாட்டு உள் அரங்கம், நூலகம், சூரிய மின்ஒளி, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், கம்பியில்லாத தொடர்பு வசதி உள்ளிட்ட அனைத்தும் அங்கு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

புதிதாக 2 கலை-அறிவியல் கல்லூரிகள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் ஆகிய 2 இடங்களில் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-

பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்கள், இந்திய பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெறும் வகையில் சென்னை, தருமபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

10 அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் தேர்வு செய்யப்படும் 100 மாணவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 15 நாள்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படும்..

புகழ்பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள்-தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகள் காணொலிக் காட்சியில் ஒளிபரப்பு செய்ய, சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் தனி மையம் ஏற்படுத்தப்படும்.

பொருள்களை சேதம் அடையச் செய்யாமல் தரத்தைப் பரிசோதிப்பதற்கு பயிற்சி அளிக்கும் மையமானது, மதுரையில் உள்ள பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏற்படுத்தப்படும். இங்கு ஆண்டுக்கு 100 பேருக்கு பயிற்சி கொடுக்கப்படும்.

புதிய கல்லூரிகள்:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்திலும் புதிதாக அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். அனைத்துப் பல்கலைக்கழகங்கள், இணைவுக் கல்லூரிகள் மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு பலவித சேவைகள் அளிக்கப்படும். இந்த மையம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டு இந்தச் செயல் திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றார்.

புதிதாக 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

புதிதாக 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், அவர் செவ்வாய்க்கிழமை படித்தளித்த அறிக்கை:-

நடப்பாண்டில் 5 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். ஆகவே, 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இந்தப் பள்ளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிகளுக்குத் தேவையான கட்டடங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ரூ.60.79 கோடியில் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும்பாக்கம், எழில் நகர் பகுதிகளில் குடியிருப்புகள் அளிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், குடியிருப்புகளில் தலா ஒரு தொடக்கப் பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் தொடங்கப்படும் என்றார்.

Leave a Reply