4 வாரங்களில் நீதிமன்றத்தில் ஆஜராக எச்.ராஜாவுக்கு உத்தரவு
நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எச்.ராஜா மீது 8 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இன்னும் 4 வாரங்களில் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
திருமயத்தில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது எச்.ராஜா சர்ச்சைக்குரிய பேசியது குறித்த சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சி.டி.செல்வம், எம்.நிர்மல்குமார் இருவரும் எச்.ராஜா தொடர்பான விவகாரத்தை கையில் எடுத்தனர். அவர்கள் இருவரும் முதல் நடவடிக்கையாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் கண்ணப்பன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் இருவரையும் நேரில் வரவழைத்தனர்.
அவர்களிடம் நீதிபதிகள், ‘‘திருமயம் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் சமுக வலைத்தளங்களில் பரவி வருவதை பார்த்தீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் இருவரும் கேள்விப்பட்டோம்’’ என்று தெரிவித்தனர்.
உடனே நீதிபதிகள் இருவரும் இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்கிறோம் என்று தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக எச்.ராஜா 4 வாரங்களுக்குள் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அதற்கேற்ப சம்மன் அனுப்புங்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து தலைமை பதிவாளரும், அட்வகேட் ஜெனரலும் உடனடியாக எச்.ராஜாவுக்கு சம்மன் அனுப்பும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.