40 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம்: மக்கள் ஒத்துழைப்பு தேவை என மின்வாரிய தலைவர் வேண்டுகோள்
சமீபத்தில் வங்கக்கடலில் உருவாகிய கஜா புயல் தமிழகத்தில் கரை கடந்து பெரும் சேதங்களை உண்டாக்கியது. குறிப்பாக வேதாரண்யம் பகுதி தனித்தீவாகவே மாறிவிட்டது. அத்தியாவசிய தேவைகளும், மின்சாரமும் இல்லாததால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.
இந்த நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 40,000 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளனதாகவும், குறிப்பாக அதிக சேதம் ஏற்பட்டுள்ள வேதாரண்யம் பகுதியில் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சுமார் 1,000 ஊழியர்கள் தயாராக இருப்பதாகவும், மின் சீரமைப்பு பணிகள் முடியும் வரை மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் வேதாரண்யம் பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளதால் சீரமைப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இருப்பினும் நகர் பகுதிகளில் ஓரிரு நாட்களிலும், கிராமங்களில் ஒரு வாரத்திலும் மின்சாரம் சீராகும் என்றும் மின்வாரிய தலைவர் விக்ரம் கபூர் கூறியுள்ளார்.