என்ன ஆனது முதல்வரின் உத்தரவு?
கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ் குடும்பங்களை வீட்டு உரிமையாளர் விரட்டியடித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி கிடப்பதால் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் திண்டாட்டமாக உள்ளது. குறிப்பாக வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற கூலித் தொழிலாளர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். வேலைகள் இல்லாததால் பிழைக்கப் போன இடத்தை விட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பவும் முடியாமல் இருக்கும் இடத்தில் வசிக்கவும் முடியாமல் உள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ்க் குடும்பங்களை வீட்டின் உரிமையாளர் வெளியே துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொள்வாயலல் என்ற கிராமத்தில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் 48 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தனர். மரம் வெட்டும் தொழில் இவர்களுக்கு ஊரடங்கால் வேலையும் வருமானமும் இல்லை. இதனால் வீட்டு வாடகை இவர்களால் கொடுக்க முடியவில்லை
இந்த நிலையில் வீட்டு உரிமையாளர், வாடகை தருமாறு கூறியதோடு, சில வீடுகளிலிருந்த பொருட்களை வெளியே வீசியும் உள்ளார். கையில் பணம் இல்லாத நிலையில், சில குடும்பங்கள் தற்போது நடுவீதிக்கு வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாத வாடகையை வீட்டின் உரிமையாளர் கேட்கக்கூடாது என அனைத்து மாநில முதல்வர்களும் கூறியுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது