4 லட்சம் மரங்கள் நட்டு சாதனை புரிந்த வனிதா மோகன்.

கோவை பிரிக்கால் நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கும் வனிதா மோகன், வேலைகளில் இருக்கும் டென்ஷனை குறைப்பதற்காக மரம் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, தற்போது  சுமார் 4 லட்சத்துக்கும் மேல் மரங்கள் நட்டு சாதனை புரிந்திருக்கிறார். இதோ அவருடைய ஒரு சிறு பேட்டி:

“பரபரப்பான நமது வாழ்க்கை முறையில் சூழலியல் சார்ந்த பல நல்ல விஷயங்களை நாம் இழந்து வருகிறோம். அதிலும் குறிப்பாக, தொழிற் துறையினர் என்றால் சொல்லவேவேண்டாம். தனிப்பட்ட விருப்பங்களுக்குக்கூட நேரம் ஒதுக்கிக்கொள்ளாமல் ஓடவேண்டியிருக்கும். ஆனால், நான் எனது பெரும்பாலான ஓய்வுநேரத்தைச் செலவிடுவது சூழலியல் சார்ந்த வேலைகளில்தான்.

நம்மை ரிலாக்ஸ் செய்வதற்கென்று ஒரு பழக்கம் தேவை என்றுதான் சூழலியல் நடவடிக்கைகளில் இறங்கினேன். இப்போது இந்த வேலைகளைச் செய்வதற்கென்று ‘சிறுதுளி’ என்று தனி அமைப்புத் தொடங்கி  நடத்தி வருகிறேன். அதன்மூலம் பல திட்டங்களையும் செய்து வருகிறேன். மரம் நடுவது, தோட்ட வேலைகள், குளம் தூர்வாருதல் போன்ற வேலைகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்வதில் எனக்குப் பரமத் திருப்தி.

நிறுவன வேலைகளின் டென்ஷன் களிலிருந்து விடுபட, என்னை ரிலாக்ஸ் செய்துகொள்ளவே இதுபோன்ற பணிகளில் இறங்கினேன். ஆனால், இப்போது இதுவே எனக்கு ஒரு முக்கிய வேலையாக மாறிவிட்டது. இதில் கிடைக்கும் சந்தோஷமும், மகிழ்ச்சியும், நிம்மதியும் வேறு எதிலும் எனக்குக் கிடைப்பதில்லை. எங்களது முயற்சியின் பயனாகப் பல இடங்களில் 500 அடிக்கும் கீழே இருந்த நீர்மட்டம் இப்போது சில நூறு அடிகள் என்கிற அளவில் உயர்ந்துள்ளது.

கோவையைச் சுற்றி நாங்கள் நட்ட நான்கு   லட்சத்துக்கும் அதிகமான மரங்களைப் பார்க்கிறபோது,  எனக்குள் தோன்றும்  சந்தோஷத்துக்கு அளவேயில்லை. எவ்வளவு வேலை டென்ஷன் இருந்தாலும் நமக்கு விருப்பமான வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினால் மனம் தானாகவே ரிலாக்ஸ் ஆகிவிடும்!

Leave a Reply