5 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து பணி செய்கிறீர்களா? அப்படியெனில் இதை கண்டிப்பாக படியுங்கள்
மருத்துவப் பத்திரிகை ஒன்றின் ஆய்வு, ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்தபடிப் பணிபுரியும் நபர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் 34 சதவிகிதம் அதிகம் என்கிறது. அமர்ந்து கொண்டே பணிபுரியும் வாழ்க்கை, உங்களைப் பலவித நோய்களின் கிடங்காக மாற்றிவிடும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து பணிபுரிபவர்களுக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்தப் பாதிப்புகளைத் தடுக்கவே கீழ்க்கண்ட வழிமுறைகள் சொல்லப்படுகின்றன.
நீண்ட நேரம் ஒரே நிலையில் உங்களைக் குறுக்கிக் கொண்டு அமராதீர்கள். அவ்வப்போது அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை உங்கள் கைகால்களை அசைத்து எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இவை உங்களை நிச்சயமாக சுறுசுறுப்பாக வைக்க உதவும்.
ஒரே இடத்தில் அமர்ந்து பணிபுரியும்போது உங்கள் மூளையும் சோர்வடைந்து போகிறது. இதைத் தவிர்க்க சீரான இடைவெளியில் நீர் அருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.
உங்கள் கணினியின் திரையை விட்டு, அவ்வப்போது கண்கள் விலகி இருக்கட்டும். உங்கள் பார்வையைவிடத் தாழ்வாகவே கணினியின் திரை இருக்கட்டும். 90 டிகிரி என்ற அளவில் உங்கள் கரங்கள் நேராக விசைப்பலகையின்மீது இருக்கட்டும்.
அவ்வப்போது சிறிதுநேரம் நின்றுகொண்டே வேலை பாருங்கள். நின்றுகொண்டே வேலை செய்யும்போது, ஒரு மணி நேரத்துக்கு சுமார் 50 கலோரிகள் வரை அதிகமாகச் செலவாகிறது.
நெருக்கமான சூழலில் பணியாற்றும்போது அதிகச் சோர்வை அடைவீர்கள். எனவே அடிக்கடி உங்கள் பாதங்களையும் கரங்களையும் தட்டுவதன்மூலம் அதிக உற்சாகத்தைப் பெறலாம். அடிக்கடி ஆழ்ந்து சுவாசிப்பதன்மூலம் உங்களுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைக்கிறது. இதனால் அதிகப்படியான ஆற்றலைப் பெறுகிறீர்கள். அளவுக்கு மிஞ்சிய கலோரிகள் எரிக்கப்பட்டு, உங்கள் மூளையின் செயல்பாடு அதிகரித்துச் சுறுசுறுப்பாக மாறுவதை உணரமுடியும்.
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை சிறிது தூரம் நடந்து விட்டு வாருங்கள். கைப்பேசியில் பேசும் போதெல்லாம் நடந்தவாறே பேசுங்கள்.