ஐ.நா மிரட்டலுக்கும் அடங்காத வடகொரியா. 5வது முறையாக மீண்டும் அணுகுண்டு சோதனை
உலக நாடுகளின் எதிர்ப்பை குறிப்பாக ஐ.நாவுக்கு அடங்காமல் ஏற்கனவே நான்கு அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ள வடகொரியா இன்று மீண்டும் 5வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியுள்ளதால் அண்டை நாடான தென்கொரியா உள்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்த சோதனை நடந்துள்ளதை தென்கொரிய அதிபர் பார்க் ஜியுன்-ஹை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து தென்கொரிய அதிபர் பார்க் ஜியுன்-ஹை கூறியதாவது: ‘ இந்த ஐந்தாவது அணுகுண்டு சோதனை மூலம் வடகொரியா கிம் ஜாங் உன் ஆட்சிக்காலத்தில் மேலும் தடைகளையும் தனிமைப்படுத்தலையும் சந்திப்பதைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது. மேலும் இத்தகைய தூண்டுதல் நடவடிக்கை அதன் சுய அழிவை வேகமாக முடுக்கி விட்டுள்ளது. ஆகவே வடகொரியா மீது அனைத்து சாத்தியமாகும் அளவுகோல்களின் மூலம் நெருக்கடியை அதிகரிப்போம், இன்னும் வலுவான தடைகளை வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
வடகொரியாவின் இந்த புதிய அணுகுண்டு சோதனைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் அணுகுண்டு சோதனை தாக்க நிலநடுக்கத்தை அறிந்திருப்பதாகவும், மேலும் தகவல்களை பெற முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் வடகொரியா இந்த கண்டனங்களை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.