5 கொலை செய்தவனுக்கு 5 ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கொன்னையம்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 36). இவர், கடந்த 9.4.2009 அன்று அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அஞ்சலை(19) என்ற பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து, தங்க சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றார்.

இதைத்தொடர்ந்து 17.5.2009 அன்று செல்லம்மாள்(65) என்பவர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தார். மற்றொரு சம்பவத்தில் 5.6.2009 அன்று விராலிமலையை சேர்ந்த வள்ளிக்கண்ணு(38) என்ற பெண் மாடு மேய்த்து கொண்டிருந்தபோது, அவரை கற்பழித்து கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

மேலும் தண்ணீர் எடுக்க சென்ற திருவாயி(40), கருப்பாயி (70) என்ற பெண்களையும் கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தார்.

இந்த 5 கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குப்புசாமியை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிச்சம்மாள் நேற்று தீர்ப்பு கூறினார்.

அவர் தனது தீர்ப்பில், 5 கொலை செய்த குற்றத்திற்காக குப்புசாமிக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வீதம் 5 ஆயுள் தண்டனையும், கொலை மற்றும் கற்பழிப்புக்கு தலா 10 வருட சிறை தண்டனையும் மற்றும் அபராத தொகையாக மொத்தம் ரூ.11 ஆயிரமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

Leave a Reply