50 ஆண்டுகளாக தமிழகத்தை இரண்டு திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன. ராமதாஸ்

50 ஆண்டுகளாக தமிழகத்தை இரண்டு திராவிட கட்சிகள் சீரழித்துவிட்டன. ராமதாஸ்

ramdossதமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் இன்னும் எட்டு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளர், கூட்டணி வியூகம், தீவிர பிரச்சாரம் ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் வடதமிழகத்தில் மட்டும், அதுவும் ஒரே ஒரு ஜாதி ஓட்டை மட்டுமே நம்பியிருக்கும் பாமக, முதல் ஆளாக முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு, பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ‘கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆண்ட இரண்டு திராவிடக் கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்தது’ என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் அந்த பேட்டியில் கூட்டணி குறித்து கூறியபோது, “‘‘தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே நாங்கள் அறிவித்துவிட்டோம். எங்களுடைய தலைமையை ஏற்றுக்கொண்டு தேர்தலைச் சந்திக்க சம்மதிக்கும் கட்சிகள், எங்களோடு தாராளமாகக் கூட்டணியில் இணையலாம். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம். மக்கள் எங்களை அமோகமாக வெற்றிபெற வைப்பார்கள். பா.ம.க தலைமையில் தமிழக அரசு அமையும். அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக இருப்பார்.’’ என்று கூறியுள்ளார்.

மேலும் பாஜக கூட்டணியில் பாமக இருக்கின்றதா என்ற கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், “‘‘தேர்தல் நேரத்தில் செய்யப்படும் உடன்பாடுகள் தேர்தலோடு முடிந்துவிடும். பி.ஜே.பி-யோடு நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு கொண்டு தேர்தலைச் சந்தித்தோம். சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் எங்கள் முடிவைச் சொல்லிவிட்டோம்.’’ என்று கூறினார்.

மேலும் தமிழகத்தின் தென்பகுதியில் பாமகவுக்கு செல்வாக்கு இருக்கின்றதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” பா.ம.க-வுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. தற்போது மதுரையில் நடந்த மாநாடு தென் தமிழகத்தில் எங்களுக்குள்ள செல்வாக்கை எடுத்துக் காட்டியது. அதுபோன்ற மாநாடுகளை திருச்சி, தஞ்சை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் நடத்த உள்ளோம். மண்டல மாநாடுகள் முடிந்ததும் மாநில மாநாட்டை நடத்த உள்ளோம். இதுவரை நிழல் பட்ஜெட் வெளியிட்ட நாங்கள், விரைவில் நிஜ பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப் போகிறோம்.’’

இவ்வாறு ராமதாஸ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply