50 நாட்களாகியும் வரவில்லை நோட்டு: கிராமப்புற மாணவர்கள் தவிப்பு

திருப்பூர்: கிராமப்புறங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 15 சதவீத மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் இன்னும் வினியோகிக்காததால் கற்றல் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எழுத்து பயிற்சி அளிப்பதற்கு, 2 வரி நோட்டு, கட்டுரை பயிற்சி ஏடு, கணித பாடத்துக்கு வடிவியல் ஏடு, வரைபட (கிராப்) ஏடு மற்றும் அந்தந்த பாடங்களுக்கான தனித்தனி நோட்டு புத்தகங்கள் என ஒரு மாணவருக்கு, 10 நோட்டுகள் வரை பள்ளி கல்வித்துறையால் இலவசமாக வழங்கப்படுகிறது.

நடப்பாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு, 50 நாட்களுக்கு மேல் ஆகியும் பல அரசு பள்ளிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் பள்ளி கல்வித்துறை சார்பில், 15 சதவீத மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. மாணவ, மாணவிகள் கடைகளில், செலவு செய்து நோட்டு புத்தகங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.