52.5% காலியிடங்கள், மெக்கானிக் பிரிவுக்கு கிராக்கி, யாரும் சீண்டாத 20 கல்லூரிகள்

52.5% காலியிடங்கள், மெக்கானிக் பிரிவுக்கு கிராக்கி, யாரும் சீண்டாத 20 கல்லூரிகள்

பொதுப் பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு (Engineering Counselling) இன்றுடன் (11.08.2017) முடிவடைகிறது. இன்னும் 91,000-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் உள்ளன. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம். கலந்தாய்வின் ஆரம்பத்தில், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பாடத்தையும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் மாணவர்கள் போட்டிபோட்டுக்கொண்டு சேர்ந்தார்கள். அதன்பிறகு, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் அதிக அளவில் சேர ஆர்வம் காட்டிவருகிறார்கள். இருப்பினும், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் 38,353 இடங்களில் 19,000 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.

பொறியியல் கலந்தாய்வு Engineering Counselling

இந்த ஆண்டில், பயோ டெக்னாலஜி மற்றும் இண்டஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி படிப்பில் 86 சதவிகித மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் பாடப் பிரிவில் மொத்தமுள்ள 1,379 இடங்களில், 1,180 மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில், எலெக்ட்ரானிக்ஸ்&இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பில் 62 சதவிகித மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இந்த இரண்டு படிப்புகளும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலும் குறைந்த கல்லூரிகளிலும் இருக்கின்றன.

முதன்மைப் படிப்புகளில், தகவல் தொழில்நுட்பப் படிப்பில் 54 சதவிகித மாணவர்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் 51 சதவிகித மாணவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்தடுத்த இடங்களில், 49 சதவிகிதம் பேர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பையும், 46 சதவிகிதம் பேர் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்பையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி என மூன்று கல்லூரிகளிலும் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் நிரம்பிவிட்டன. இதைப்போலவே, அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளிலும் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில், திருச்சி மற்றும் விழுப்புரம் கல்லூரிகளைத் தவிர, இதர கல்லூரிகளில் சிவில் இன்ஜினீயரிங் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் தமிழ் மீடியத்தில் உள்ள இடங்கள் நிரம்பாமல் இருக்கின்றன.

மாணவர்கள் பெரும்பாலும் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங், சிவில் இன்ஜினீயரிங் பாடங்களில்தான் அதிக அளவில் சேர்ந்திருக்கிறார்கள். பயோ டெக்னாலஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பப் பாடங்களில் மாணவிகள் அதிக அளவில் சேர்ந்திருக்கிறார்கள். இதுவரை கல்லூரியில் சேரத் தேர்ந்தெடுத்த 18,729 இடங்களில், 282 மாணவிகள் மட்டும் மெக்கானிக்கல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் கலந்தாய்வில், இதுவரை 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒருவரும் சேரவில்லை. 121 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே சேர்ந்திருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மட்டுமே முழுமையாக நிரம்பியிருக்கிறது. அதிலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பியிருக்கின்றன. இன்னும் மூன்று இடங்கள் மட்டுமே நிரம்பாமல் இருக்கின்றன. 150 பொறியியல் கல்லூரிகளில் 50-க்கும் குறைவான மாணவர்களே சேர்ந்திருக்கிறார்கள். 250 கல்லூரிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களே சேர்ந்திருக்கிறார்கள்.

10.08.2017-ம் தேதி நிலவரப்படி, பொது கலந்தாய்வில் உள்ள இடங்களில் 1,75,416 இடங்களில், 83,562 இடங்கள் மட்டும் நிரம்பியுள்ளன. அதாவது, 47.5 சதவிகித இடங்கள் மட்டுமே நிரம்பியிருக்கின்றன. இன்னமும் 52.5 சதவிகித இடங்கள் காலியாக இருக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, “அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்புக் கல்லூரிகளாக உள்ள 200-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், போதுமான உள்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்களும் இல்லை. தற்போது நடந்துள்ள கவுன்சலிங்கில் 20 சதவிகிதத்துக்கும் குறைவான சேர்க்கை மட்டுமே நடந்துள்ள கல்லூரிகள் மூடப்பட வேண்டும். குறைந்த மாணவர்கள் மட்டுமே வைத்துள்ள இவர்களால், எந்த வசதியையும் செய்துதர முடியாது. இந்தக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் இதர கல்லூரியில் சேர்க்கப்பட வேண்டும். இதுகுறித்து, மாணவர்களும் பெற்றோர்களும் யோசிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply