மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய ஏரியில் சுமார் 53 மெட்ரிக் டன் எடையுள்ள மீன்கள் திடிரென தண்ணீரில் இறந்து மிதந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டில் உள்ள மேற்கு ஜாலிஸ்கொ என்ற மாகாணத்தில் காஜிடிட்லான் என்ற மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் துள்ளி விளையாடும் அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை திடீரென கிட்டத்தட்ட அந்த ஏரியில் உள்ள அனைத்து மீன்களும் செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்கள் திடீரென செத்து மிதந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து மெக்சிகோ கடல்வாழ் துறை அலுவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர். ஏரியில் உள்ள தண்ணீரின் அளவு மிகவும் குறைந்துவிட்டதால் மீன்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை.
மாநில சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் மீன்கள் செத்து மிதந்ததன் காரணத்தை கண்டறிய குழு ஒன்றை நியமித்துள்ளனர். ஏரியில் விஷம் ஏதும் கலந்துள்ளதா? என்பதை அறிய ஏரியின் தண்ணீர் சோதனை செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர். ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். செத்து மிதக்கும் மீனகள் அனைத்தும் அப்புறப்படுத்த இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.