கடந்த வருடம் பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக வெகு பிரமாண்டமாக கட்டப்பட்ட கால்பந்து ஸ்டேடியத்தின் மதிப்பு $530 மில்லியன் ஆகும்.. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.3300 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய தொகை செலவு செய்து கட்டப்பட்ட கால்பந்தாட்ட ஸ்டேடியம் தற்போது பஸ் டிப்போவாக செயல்பட்ட்டு வருவதாக செய்திகள் கூறுகின்றன.
72,000 பேர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் வசதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த விலையுயர்ந்த ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை போட்டிகள் முடிந்தபின்னர் எதற்கு பயன்படுத்துவது என்பது குறித்து பிரேசில் அரசுக்கு எந்தவித ஆலோசனையும் அதிகாரிகளால் வழங்கப்படாததால், தற்போதைக்கு பஸ் டிப்போவாக செயல்பட்டு வருகிறது. தற்போது 400 பேருந்துகள் வரை இங்கு நிறுத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் ஆக்கபூர்வமாக இந்த ஸ்டேடியத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஸ்டேடியத்தில் ஒருசில பகுதிகளை அறைகளாக மாற்றப்பட்டு அவை அலுவலகங்களுக்காகவும், போர்டு மீட்டிங் நடைபெறவும் பயன்படுத்தி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.