ரயில் கொள்ளையில் முக்கிய துப்பு துலங்கியது. வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா?
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ரயில் கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 8ம் தேதி ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ஐஓபி வங்கிக்கு சொந்தமான 5 கோடியே 75 லட்சம் ரூபாய் மர்ம நபர்களின் கைவரிசையால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் முதலில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. 5 குழுக்களாக சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். சேலம், விருத்தாச்சலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்றா இந்த குழுவுக்கு தற்போது முக்கிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்கள் கடந்த 6 மாதங்களாக ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு பணம் கொண்டு செல்வதை நோட்டமிட்டு, திட்டமிட்டே இந்த கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. வட மாநில கொள்ளையர் குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீசார் திரட்டி வருவதாகவும் மிக விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.