இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5வது ஒருநாள் போட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்க இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக இங்கு கனமழை கொட்டி வருவதால், இந்த போட்டியும் ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 7 போட்டிகள் கொண்ட தொடரில், 3 போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, ராஞ்சியில் நடந்த 4வது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. அந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 295 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்தியா 4.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 27 ரன் எடுத்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்தானது.
இந்திய அணி தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்றால், எஞ்சியுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 5வது ஒருநாள் போட்டி கட்டாக், பாரபட்டி ஸ்டேடியத்தில் இன்று நடப்பதாக இருந்தது. கடந்த சில நாட்களாக மழை கொட்டி வரும் நிலையில், மேலும் 2 நாள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மைதானம் முழுவதும் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால் இன்றைய போட்டி ரத்து செய்யப்படுகிறது. கட்டாக் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த நிலையில், கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று ஒடிசா கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. 6வது போட்டி நாக்பூரில் 30ம் தேதி நடக்கிறது.