6 மாதங்களுக்கு மணல் குவாரிகளை மூட நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழகத்தில் சட்டவிரோதமாக கடந்த பல ஆண்டுகளாக மணல்திருட்டு நடைபெற்று வருவதால் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கவலையடைந்தனர். இதனையடுத்து மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கும் சிக்கல் ஏற்பட்டதால் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது,
*மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம்.
*தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும்.
*புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது.
*வருங்கால தமிழக சந்ததியின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
*சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
*மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
*சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதியின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர் சங்கங்களும், கட்டுமான சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் தமிழக எதிர்க்கட்சிகள் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.