சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சையத் உஸ்மான் என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பினார்.
அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்ட போது அதில் எதுவும் சிக்கவில்லை. அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, மறைத்து வைத்து இருந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
இதேபோல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹைதர் என்பவரும் கடத்தி வந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் மலேசியாவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் சென்னை வந்த பரமக்குடியை சேர்ந்த உசேன் கடத்தி வந்த 600 கிராம் தங்க கட்டிகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும்.
கடந்த 2 நாள் நடந்த சோதனையில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக பிடிப்பட்ட 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.