கடந்த வாரம் செம்மரங்களை வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு 20 அப்பாவி தமிழர்களை ஆந்திர மாநில போலீசார் சுட்டி கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் நேற்று மீண்டும் 61 தமிழக தொழிலாளர்கள் செம்மரம் வெட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று, நெல்லூர் மாவட்டத்தில் செம்மரம் வெட்டியதாக 61 தமிழக தொழிலாளர்களை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக நெல்லூர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கஜராவ் பூபால் அவர்கள் அளித்த பேட்டியில் ”நெல்லூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில், இரண்டு வெவ்வேறு பகுதிகளில் மரங்கள் வெட்டும் இரண்டு குழுக்களைக் கைது செய்துள்ளோம்.
அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 40 செம்மரக் கட்டைகளும், நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்ட இவர்களுக்கும் கடந்த 7 ஆம் தேதி செம்மரங்களை வெட்டிய கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
20 தமிழர்களை ஆந்திர போலீசார் திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக தமிழக கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது மீண்டும் 61 தமிழர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.