திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் முறைகேடு செய்ததாக நேற்று ஒரே நாளில் 61 பேர் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையில் முறைகேடு செய்ததாக ஏராளமான புகார்கள் வந்ததன் பேரில் தமிழக அரசு அதிகாரிகள், நேற்று அதிரடியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல திடுக்கிடும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் 61 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக விலைக்கு மது விற்பனை செய்வது, டூப்ளிகேட் மதுவகைகளை விற்பனை செய்வது, விற்பனையான தொகையைவிட அதிக தொகையை இருப்பில் வைத்திருந்தது போன்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட கடைகளின் மேனேஜர்களிடம் எழுத்துப்பூர்வமான கடிதமும் பெறப்பட்டது. மேலும் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மற்ற மாவட்டத்திலும் நடைபெறும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.