இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த 69 பெற்றோர்களுக்கு சிறை: தெலுங்கானா அரசு அதிரடி

இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த 69 பெற்றோர்களுக்கு சிறை: தெலுங்கானா அரசு அதிரடி

18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் கொடுக்கப்படாது. இதனால் பல சிறுவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தி வருவதாக தெலுங்கானா மாகாணத்தில் ஏராளமான புகார்கள் வந்தன. சிறுவர்களை இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என ஏற்கனவே அரசு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்று அதிரடியாக லைசென்ஸ் இல்லாமல் சிறுவர்களை கார், இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதித்த 69 பெற்றோருக்கு 3 நாட்கள் வரை சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து துணை ஆணையர் ஏ.வி.ரங்கநாத் ஐதராபாத்தில நிருபர்களிடம் கூறியதாவது:

ஐதராபாத் நகரில் நாளுக்கு நாள் சாலைவிபத்துக்கள் அதிகரித்து வந்தன. அதிலும் குறிப்பாக 14வயது முதல் 16 வரையிலான சிறுவர்கள் பைக், ஸ்கூட்டர், கார்களை உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டி விபத்துக்களில் சிக்குகிறார்கள். ஜனவரி மாதத்தில் மட்டும் 5 சிறுவர்கள் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இதையடுத்து, இவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதித்த பெற்றோர்களை தண்டித்தால் விபத்துக்கள் குறையும் என திட்டமிட்டோம். உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 69 சிறுவர்கள் சிக்கினார்கள்.

இவர்களின் பெற்றோர்களுக்கு உரிய அபராதம் விதிப்பதற்கு பதிலாக, கவனக்குறையாக வாகனத்தை கையாளுதல், உரிமம் இல்லாதவர்கள் வாகனத்தை கையாள அனுமதித்தல் ஆகியபிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இவர்களுக்கு நீதிபதி ஒரு நாள் முதல் 3 நாள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதித்தார். இதற்கு முன் கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோருக்கு அபராதம் விதித்தும் எந்தவிதமான பலனும் இல்லை என்பதால், சிறை தண்டனை விதித்தோம்.

இதன்படி கடந்த ஒரு மாதத்தில் 69 சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் நலக்காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எங்களின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெற்றோரை கைது செய்வதைப் பார்க்கும் பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை எடுக்க அஞ்சுகிறார்கள். இதனால், கடந்த ஒரு மாதமாக விபத்துக்கள் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply