பெங்களூரில் கேபிஎன் பேருந்துகளை எரித்தவர்களில் 7 பேர் கைது.

பெங்களூரில் கேபிஎன் பேருந்துகளை எரித்தவர்களில் 7 பேர் கைது.

2கடந்த வாரம் கர்நாடகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் பேருந்துகள் உள்பட 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், லாரிகள் எரிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் ஒரு பெண் உள்பட 10 பேர்களை போலீசார் தேடி வருவதாகவும் கர்நாடக போலீஸ் தெரிவித்துள்ளது

தீவைப்பு சம்பவம் குறித்து கேபிஎன் நிறுவன ஊழியர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. கேபிஎன் நிறுவன ஊழியர்கள் எடுத்த வீடியோ மற்றும் ஊடகங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் டிசவுசா நகரை சேர்ந்த ரக் ஷித் (19), சந்தன் (19), சதீஷ் (27), லோகேஷ் (25), கிரண் கவுடா (27), கெம்பேகவுடா (28), பிரகாஷ் (46) ஆகிய 7 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 147 (கலவரம் செய்தல்), 427 (சேதம் விளைவித்தல்), 324 (பயங்கர ஆயுதங்களால் தாக்குதல்), 435 (தீ வைத்து எரித்து பெரிய இழப்பு ஏற்படுத்துதல்) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதான 7 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வன்முறையை நேரில் பார்த்தவர்கள் அளித்த சாட்சியம் மூலம், இதில் ஒரு பெண் உட்பட மேலும் 10 பேர் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள 10 பேரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply