கடந்த பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு துரோகம் செய்து சரியாக தேர்தல் பணி செய்யாத திமுக நிர்வாகிகள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 7 பேர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, திமுகவின் பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் ”சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களில் 7 பேர் விளக்க கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர்களின் விளக்க கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வகித்து வந்த பதவிகளிலேயே மீண்டும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
1. தியாகதுருகம் ஒன்றிய செயலாளர் வசந்தம் க.கார்த்திகேயன்.
2. பொள்ளாச்சி நகர செயலாளர் தென்றல் செல்வராஜ்.
3. வால்பாறை ஒன்றிய செயலாளர் கோழிக்கடை கணேசன்.
4. குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜ மாணிக்கம்.
5. கவுண்டம்பாளையம் நகர செயலாளர் கே.எம். சுந்தரம்.
6. பெரிய நாயக்கன் பாளையம் ஒன்றிய செயலாளர் டி.சி.சுப்பிரமணியம்.
7. மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் கனகு என்ற கனகராஜ்.
மேலும், தர்மபுரி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பதவியில் இருந்த முல்லை வேந்தனும், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த இன்பசேகரனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, தற்போது தர்மபுரி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக அமைப்புகள் கலைக்கப்பட்டு ஒன்றிணைந்த தர்மபுரி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பாளராக தடங்கள் பெ.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளார்.