ஆந்திர போலீசாரால் நேற்று திருப்பதி வனப்பகுதியில் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தொழிலாளர்களில் 7 தமிழர்களின் விபரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது. இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. கொல்லப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் இதுவரை ஏழு பேர்களின் விபரங்களை கண்டுபிடித்துள்ளதாகவும், மற்றவர்களின் விபரங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பாடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி, முனுசாமி முருகன், வேட்டகிரிபாளையத்தை சேர்ந்த சசிகுமார், பெருமாள் மற்றும் காலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனி, அர்ஜூனாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக போலீஸாரின் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ள தொழிலாளர்களின் புகைப்படங்கள் சம்மந்தப்பட்ட வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அவர்களின் சொந்த கிராமங்களில் காட்டி, அவர்களின் முகவரி மற்றும் விவரங்களை அறியும் முயற்சியில் தமிழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள நம்பியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்ற போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள், அங்கு ஒவ்வொரு வீட்டிலும் இறந்தவர்களின் புகைப்படங்களைக் காட்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.