அதிமுக கூட்டணியில் 7 கட்சிகள். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து இறுதி எடுத்து வரும் நிலையில், ஆளும் அதிமுகவும் முதல்முறையாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக ஏழு கட்சிகளின் தலைவர்கள் நேற்று முதல்வரை சந்தித்து தொகுதி ஒதுக்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளனர்.
பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுசெயலர் கதிரவன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூது, இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் , தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் , இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.தமிழரசன், கொங்கு பேரவை கட்சி தனியரசு, சமத்தும மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், ஆகியோர், ஜெயலலிதாவுடன் நேற்று அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, வரும் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து ஏழு கட்சிகளும் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், மக்களிடம் செய்யவுள்ள பிரசார வியூகம் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய செயலர் தேவராஜன் பேசியபோது ” “தமிழக அரசு பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி மலரும். தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார பணியில் எங்கள் கட்சியின் குழு செயல்படும். வரும் தேர்தலில் கூடுதல் சீட் வழங்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று கூறினார்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் மாநில பார்வர்டு பிளாக் கட்சியின் பொது செயலர் கதிரவன் கூறும்போது,
“ஜெயலலிதாவைச் சந்தித்தோம். எங்களின் ஆதரவை தெரிவித்தோம். அதிமுக வெற்றிக்கு உறுதியாக இருப்போம் என்று உறுதி அளித்துள்ளோம். தொகுதி அதிகம் தர வேண்டும் என்று கோரியுள்ளோம். மீண்டும் ஜெயலலிதா முதல்வராவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
அதே போல, இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன்,இந்திய தவ்கீத் ஜமாஅத் தலைவர் பார்க்கர்,கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ.தனியரசு ஆகியோரும் அதிமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாகவும் தெரிவித்தனர்.