தர்மபுரி மாவட்டம் பூச்சட்டிஅள்ளி கிராமத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருந்தீசர் கோவில் கும்பாபிஷேகம் தமிழ் முறைப்படி நாளை(வெள்ளிக் கிழமை) நடக்கிறது.
மருந்தீசர் கோவில்
தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி அருகே பூச்சட்டிஅள்ளி கிராமத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனமர் மருந்தீசர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் நடந்தன.
திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. தமிழ்முறைப்படி நடக்கும் இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று அதிகாலை 12 ஊர்களில் இருந்து முளைப்பாரி கொண்டு வரும் நிகழ்ச்சியும், முதல் கால வேள்வியும் நடந்தது. இதைத்தொடர்ந்து இன்று காலை திருப்பள்ளி எழுச்சியும், 2-ம் கால வேள்வியும், கோபுர விமான கலசம் நிறுவுதலும் நடக்கிறது. மாலையில் 3-ம் கால வேள்வி நடக்கிறது.
கும்பாபிஷேகம்
விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலையில் காப்பணிவித்தல் நிகழ்ச்சியும், 4-ம் கால வேள்வி பூஜைகளும் நடக்கின்றன. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு புனித நீர் குடங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு கோபுர விமான கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
இந்த கும்பாபிஷேக விழாவை சிரவை ஆதினம் குமரகுருபரசாமிகள், பேரூராதீனம் மருதாசல அடிகளார், வேலூர் ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற தலைவர் சென்னியப்பனார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள், பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருஞானசம்பந்தம் தலைமையிலான திருப்பணிக்குழுவினர் மற்றும் 12 கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.