விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான 8 அமைப்புகளின் தடை நீக்கம். சிறிசேனா அதிரடி உத்தரவு
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை இந்திய அரசு இன்னும் முழுமையாக நீக்காத நிலையில் இலங்கையில் புதிய அதிபர் சிறிசேனா விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 8 அமைப்புகளின் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளர். இந்த தடை நீக்கம் இலங்கை தமிழகர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை வீழ்த்தி புதிய அதிபராக பதவியேற்ற சிறிசேனா, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்த அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளார். உலகதமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடா தமிழர் தேசியசபை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு, கனடா தமிழ் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய சபை ஆகிய 8 அமைப்புகள் மீதான தடையை சிறிசேனா அரசு நீக்கியுள்ளது.
ஆனால் விடுதலைப்புலிகள், தமிழர் புனர் வாழ்வுக்கழகம் இணைப்பு குழு, தமிழர் ஒருங்கிணைப்பு குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்களவை, உலக தமிழர் நிவாரண நிதியம், தலைமை செயலக குழு மீதான தடை தொடர்ந்து நீடிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 155 தனி நபர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக சிறிசேனா அரசு அறிவித்துள்ளது. இந்த 155 தனி நபரில் 22 பேர் கனடாவிலும், டென்மார்க்கில் 17 பேரும், இலங்கையில் 14 பேரும், இங்கிலாந்தில் 12 பேரும், நெதர்லாந்தில் 12 பேரும், பிரான்சில் 11 பேரும், ஜெர்மனியில் 8 பேரும், இந்தியாவில் 7 பேரும், இத்தாலியில் 4 பேரும், மலேசியாவில் 3 பேரும், நார்வேயில் 2 பேரும், அமெரிக்கா, தாய்லாந்தில் தலா ஒருவரும் தற்போது வசித்து வருகின்றனர்.