800 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தில் தீ விபத்து
பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற நோட்ரடேம் கதீட்ரல் என்ற தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் தேவாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள இந்த தேவாலயத்திற்கு ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த தேவாலயம் 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. பாரிஸின் பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயம் ஐரோப்பிய கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த தேவாலயத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் தேவாலய மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. பின்னர் தேவாலயம் முழுவதும் பரவிய தீயால், தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை பரவியது. மக்கள் பத்திரமாக வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 400 தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.