ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு பல்வேறு வகையான உடற்பயிற்சிகள் நடைமுறையில் இருக்கின்றன. அதில் தங்களுக்கு பிடித்த பயிற்சிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரும் மேற்கொள்கிறார்கள். அதில் சில விளையாட்டுத்தனமானதாகவும், வித்தியாசமாகவும் அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று, ‘தவளை ஜம்ப்’. தவளை போல் தாவி குதித்து செய்யும் இந்த வகை எளிய உடற்பயிற்சி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
30 நிமிடங்கள் தவளை ஜம்பிங் பயிற்சி செய்தால் உடலில் இருந்து 800 கலோரிகள் செலவாகும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்தால் உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். தவளை போல் துள்ளிக் குதிப்பது இதயத்திற்கும் நன்மை பயக்கும்.
இடுப்புக்கு கீழ் உள்ள தசைகளையும் வலுப்படுத்தும். இடுப்பு வலி மற்றும் கால் வலியில் இருந்தும் விடுபடலாம். ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் இந்த பயிற்சி ஏற்றது. இடுப்பு மற்றும் தொடைப்பகுதி எலும்புகளையும் வலுவாக்கும். ரத்த ஓட்டமும் கட்டுக்குள் இருக்கும். ஒவ்வொரு முறையும் குறைந்தது 30 விநாடிகள் தாவி குதித்து பயிற்சி செய்ய வேண்டும். பின்பு சிறிது இடைவெளிவிட்டு பயிற்சியை தொடரவேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு விரும்பாதவர்கள்கூட மகிழ்ச்சியாக இதனை மேற்கொள்ளலாம்.
இந்த பயிற்சி எளிதானது. முதலில் சமதளம் கொண்ட தரையில் நேராக நிமிர்ந்து நின்று இரு கைகளையும் மேலே உயர்த்தி குதிக்க வேண்டும். பின்பு தரையில் தவளை போல் கால்களை மடக்கி அமர்ந்து கொண்டு இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நேராக நிமிர்ந்து துள்ளி குதித்தபடி அமர்ந்து கால்களை நகர்த்தி தாவி செல்லவேண்டும். முதலில் இந்த பயிற்சியை செய்யும்போது உடல் சமநிலையை இழக்கக்கூடும். சரியாக கால்களை நகர்த்தி முறையாக பயிற்சி செய்தால் எளிதாகிவிடும்.