சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் “நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் ஆனந்த், 43, நார்வேயின் இளம் வீரர் கார்ல்சன், 22, மோதுகின்றனர்.
மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின், முதல் நான்கு சுற்று போட்டிகள் “டிரா’ ஆனது. 5, 6வது சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். ஏழாவது சுற்று “டிரா’ ஆனதால், ஆனந்த் (2.5), கார்ல்சனை (4.5) விட, 2 புள்ளிகள் பின்தங்கி இருந்தார்.
நேற்று எட்டாவது சுற்று போட்டி நடந்தது. ஆனந்த் கறுப்பு காய்களுடன் விளையாடினார். 28 வது நகர்த்தலில் போட்டி “டிரா’ ஆவது உறுதியானது. ஒரு மணி நேரம், 16 நிமிடங்கள் நடந்த போட்டி முடிவில், 33வது நகர்த்தலில் இரு வீரர்களும் “டிரா’ செய்ய சம்மதித்தனர். எட்டு சுற்று முடிவில் ஆனந்த் 3, கார்ல்சன் 5 புள்ளிகள் பெற்றனர்.
இன்று ஓய்வு நாள். நாளை 9வது சுற்று துவங்குகிறது. ஆனந்த்தை பொறுத்தவரையில், பட்டத்தை தக்கவைக்க வேண்டும் எனில், மீதமுள்ள 4 சுற்றில், 3 ல் வெல்ல வேண்டும். ஒருவேளை, குறைந்தது 2 வெற்றி, 2 “டிரா’ செய்தால் தான், வெற்றியாளரை நிர்ணயிக்க போட்டி “டை பிரேக்கருக்கு’ (நவ., 28) செல்லும்.
மாறாக, 3 போட்டிகள் “டிரா’ ஆகும் பட்சத்தில், கார்ல்சன், 6.5 புள்ளிகள் பெற்று, வரும் 26ம் தேதி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்று விடுவார். சொந்தமண்ணான சென்னையில் போட்டி நடப்பது ஆனந்துக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. பட்டத்தை தக்க வைக்க, இவர் ஏதாவது அதிசயம் நிகழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.