சென்னையில் 5ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி ஒருவர் வானொலி தொகுப்பாளராக இருந்து சாதனை படைத்துள்ளார்.
சென்னை வேளச்சேரியைசேர்ந்த கோபி வெங்கடேசன் என்பவரது 9 வயது மகள் ராதா ராகமாலிகா, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தற்போது 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சென்னை சைதாப்பேட்டையில் இருந்து இயங்கி வரும் பிக் எஃப். எம். என்ற தனியார் நிறுவன வானொலியில் 1 மணி நேர நிகழ்ச்சியை நேற்று காலை தொகுத்து வழங்கினார். இதனை, இளம் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு மற்றும் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவை அங்கீகரித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டின் நடுவர் விவேக் ராஜா மற்றும் தமிழ்நாடு புக் ஆஃப் ரெக்கார்டின் நடுவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
இது குறித்து ராதா ராகமாலிகாவின் தத்தை கோபி வெங்கடேஷ், தாய் பாபி ஆகியோர் கூறியது:
சிறு வயதிலிருந்தே படிப்பு, விளையாட்டு, கலை என அனைத்திலும் ஆர்வம் கொண்டவராக ராதா ராகமாலிகா விளங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது இளம் ரேடியோ நிகழ்ச்சித் தொகுப்பாளராகச் சாதனைப் படைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கான பயிற்சியை கடந்த 6 மாதங்களாக அவர் எடுத்து வந்ததாக அவர்கள் கூறினர்.