‘போகன்’ திரைவிமர்சனம்.
ஜெயம் ரவி, அரவிந்தசாமி கூட்டணியில் வெளியான ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் சூப்பர் ஹிட்டை அடுத்து அதே கூட்டணி மீண்டும் இணணந்துள்ள படம் தான் ‘போகன்’. ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ இயக்குனர் லட்சுமணன் மீண்டும் அதே ஜோடியுடன் கூடவே அரவிந்தசாமியுடன் களமிறங்கியுள்ளார். இந்த டீமுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பார்ப்போம்
ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ஃபேஸ் ஆஃப்’. இந்த படத்தை பார்க்காதவர்கள் அனேகமாக இருக்க மாட்டார்கள். இந்த படத்தின் முக்கிய கருவான ஆள்மாறாட்ட களத்தில் தான் இந்த படத்தின் கதை பயணிக்கிறாது.
பணத்திற்காக எதையும் செய்ய துணியும் கேரக்டர் அரவிந்தசாமிக்கு. வங்கி, நகைக்கடையில் தனக்கு இருக்கும் நூதனமான சக்தியான ஆள்மாறாட்ட சக்தி மூலம் கொள்ளையடித்து அந்த கொள்ளை பழியை வேறொருவர் மீது சுமத்திவிட்டு தப்பிப்பதுதான் அவரது திறமை. இந்நிலையில் அவர் அடித்த ஒரு வங்கிக்கொள்ளையை அதே வங்கியில் வேலை பார்க்கும் ஜெயம் ரவியின் தந்தையான ஆடுகளம் நரேன் மீது சுமத்தி விடுகிறார். இதனால் ஜெயம் ரவியின் குடும்பமே சிக்கலில் சிக்க, அந்த சிக்கலை நேர்மையான போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவி எப்படி விடுவிக்கின்றார் என்பதுதான் மீதிக்கதை
ஜெயம் ரவி, அரவிந்தசாமி இருவருமே ஆள்மாறாட்டம் மூலம் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடிப்பதால் உண்மையில் இந்த படத்தின் ஹீரோ யார்? வில்லன் யார்? என்பதை கண்டுபிடிக்கவே முடியாத அளவில் உள்ளது. மாறி மாறி வரும் இரண்டு கேரக்டர்களையும் இருவருமே தங்களுடைய அனுபவத்தின் மூலம் சிறப்பாக செய்துள்ளனர். கதையை கடைசி வரை இந்த இரண்டு கேரக்டர்களே தாங்கி பிடித்து செல்வதால் சுவாரஸ்யம் குறையவில்லை.
ஹன்சிகாவும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதை தவிர வேறு குறிப்பிடும் அம்சங்கள் இல்லை. இன்னும் சொல்ல போனால் நடித்துள்ளார் என்பதை விட கவர்ச்சியாக வருகிறார் என்று கூட சொல்லலாம். இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க கவர்ச்சி களத்தில் இறங்கிவிட்டார் ஹன்சிகா
இந்த ஆள்மாறாட்ட கதையில் இன்னொரு முக்கிய கேரக்டருக்கு நாசரை தேர்வு செய்தது இயக்குனரின் புத்திசாலித்தனம். கடைசி சில நிமிடங்களில் நாசர் தான் படத்தை தூக்கி நிறுத்துகிறார்.
ஆடுகளம் நரேன், நாசர், பொன்வண்ணன், அக்ஷரா கெளடா, நாகேந்திர பிரசாத் ஆகியோர்கள் தங்களுக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர். டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும் மிக அருமை. ஒளிப்பதிவு ஓகே. ஆனால் எடிட்டர் இன்னும் கத்தரியை பயன்படுத்தியிருக்கலாம்
இயக்குனர் லட்சுமணன், லாஜிக்கை மறந்துவிட்டு படம் பாருங்கள் என்று டைட்டிலில் போட்டிருக்கலாம். படத்தில் எண்ண முடியாத அளவுக்கு லாஜிக் ஓட்டைகள். குறிப்பாக காவல்துறை அலுவலகத்திலேயே தொடர்ந்து கொலைகள் நடப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
இருப்பினும் கூடுவிட்டு கூடுபாயும் அபூர்வ சக்தியை தற்காலத்துக்கு தகுந்தவாறு பயன்படுத்தியிருப்பது அருமை.
மொத்தத்தில் ‘போகன்’ ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓகே ரகம். ஒருமுறை பார்க்கலாம்