சட்டப்பேரவையை துவம்சம் செய்த திமுகவினர்!
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில் திமுகவினர் சபாநாயகரை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு உண்டானது.
சட்டப்பேரவையில் அனைவரும் ஒரே நேரத்தில் பேச முயற்சிப்பதால் கூச்சம், குழப்பம் நிலவியது. ஓ.பன்னீர் செல்வம் பேச மைக் வழங்கவேண்டும் என்றும் ஸ்டாலின் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் ரகசிய வாக்கெடுப்பு மட்டுமே உண்மையான ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் அளித்திருக்கும் நிலையில் இவ்வளவு அவசரமாக வாக்கெடுப்பு நடத்துவதன் காரணம் என்று மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார். வாக்கெடுப்பு நடந்தால் ரகசிய வாக்கெடுப்பு தான் நடக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார். தொடர் கூச்சலில் ஈடுபட்ட திமுகவினர், திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் தனபாலின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். புத்தகங்களை கிழித்து எறிந்து திமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். எம்எல்ஏ பூங்கோதை, எம்எல்ஏ ரவிச்சந்திரன் இருவரும் தங்களின் இருக்கை மீது ஏறி நின்று கோஷத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து சபாநாயகர் இருக்கை மீது ஏற திமுக எம்எல்ஏக்கள் முயற்சி செய்தனர். சபாநாயகர் முன் இருந்த மேஜையை உடைத்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து சபாநாயகரை காவலர்கள் பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர். சபாநாயகர் வெளியேறியதை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.