எங்களது சட்டையைக் கிழித்து அடித்து, உதைத்தனர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சபாநாயகர் சட்டையை தானே கிழித்துக் கொண்டார். எங்களை அடித்து, உதைத்து, சட்டையை கிழித்தனர். கவர்னரிடம் எங்களுக்கு நேர்ந்ததை முறையிட செல்கிறோம்” என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று தனது பலத்தை நிரூபிக்க இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி இருந்தார். இன்று காலை சட்டமன்றம் கூடியதில் இருந்து சட்டமன்றத்திற்குள் அசாதாராண சூழல் நிலவி வருகிறது.
சட்டமன்றத்திற்குள் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து, செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டியில், ”அதிமுக எம்.எல்.ஏ.,க்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் என்று நாங்களும் மற்ற கட்சியினரும் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். ஆனால், சபாநாயகர் ஒப்புக் கொள்ளவில்லை. சபையில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியிருந்தேன். சபாநாயகரே சட்டையைக் கிழித்துக் கொண்டு, நாங்கள் கிழித்தோம் என்று கூறுகிறார். ஒரு சபாநாயகரே இவ்வாறு கூறலாமா?
இடையில் சபையை ஒத்திவைத்து விட்டு அவரது அறைக்கு அழைத்தார். உங்களது உறுப்பினர் என்னை இப்படி செய்துவிட்டனர். நான் அதற்கு தெரிந்தோ தெரியாமலோ நடந்துவிட்டது, மன்னிப்பு கோருகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். ஆனாலும், அவர் சொன்னதையே சொல்லிக் கொண்டு இருந்தார். நாங்கள் அங்கே அமர்ந்து அறப்போராட்டம் நடத்தினோம். ஆனால், அவரோ ஆட்களை அனுப்பி எங்களை அடித்து, உதைத்து, சட்டைகளைக் கிழித்து குண்டுக் கட்டாக வெளியேற்றினார். எங்களுக்கு உள் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
கவர்னரை சந்தித்து எங்களுக்கு நடந்த அவலங்களை முறையிட உள்ளோம்” என்றார்.