நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த ஸ்டாலின் வழக்கு விசாரணை திடீர் ஒத்திவைப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக செயல்தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என்று அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் ஆர். மகாதேவன் முன்னிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் திமுக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
முக்கிய எதிர்கட்சியி உறுப்பினர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டதோடு, சட்டப்பேரவையில் அன்றைய தினம் எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் திருத்தம் மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்ஜ்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று நேற்று கூறப்பட்டது. ஆனால் இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.