அம்மா உணவகத்தை பின்பற்றி ஹரியானாவில் புதிய உணவு திட்டம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வரவேற்புக்குரிய திட்டங்களில் ஒன்று ‘அம்மா உணவகம்’ வெளியூரில் இருந்து சென்னைக்கு வேலை நிமித்தம் தங்கியுள்ள இளைஞர்களின் வரப்பிரசாதமாக திகழ்ந்து வரும் இந்த திட்டத்திற்கு பெரும் ஆதரவு இருந்து வரும் நிலையில் தற்போது இதே போன்\ற ஒரு திட்டத்தை ஹரியானா மாநில முதல்வர் அமல்படுத்தியுள்ளார்.
ஹரியானா அரசு கட்டிட வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு 5 ரூபாயில் காலை உணவும், 10 ரூபாயில் மதிய உணவும் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று அறிவித்துள்ளார்.
அண்ட்யோதயா அன்ன யோஜனா என்ற பெயரில் உருவாகவுள்ள இந்த உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டிட தொழிலாளர்களுக்கு உணவு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்திற்குள் இத்திட்டத்தை அமல் படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் இந்த திட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்று தொழிலாளர்களுக்கான உணவு கிடைப்பதில் உதவ வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கட்டிட தொழிலாளர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே ஒரு வேன் மூலம் உணவு எடுத்துச் சென்று வழங்கவும் ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஹரியான அரசு அறிவித்துள்ளது.