சீமைக்கருவேல மரங்களை அகற்ற சட்டம்: தமிழக அரசுக்கு உத்தரவு
சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, நாட்டின் வளத்தையே உறிஞ்சி எடுக்கும் விஷமாக உள்ளது என்ற விழிப்புணர்வு இப்போதுதான் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சீமைக்கருவேல மரங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சீமைக்கருவை மரங்களை அகற்றுமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், உடனடியாக அதாவது இரண்டு மாதத்திற்குள் இதற்கான சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் முன்னாள் மேயர் பட்டுராஜ் ஆகியோர் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை இன்று உயர் நீதிமன்ற கிளையில் நடந்தபொது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் மற்றும் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களையும் வேரோடு அகற்றியது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 10% சீமை கருவேல மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும், ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் கருவை மரங்களை அகற்ற முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும் ,சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசு சார்பில் உரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சீமைக் கருவை மரங்களின் பாதிப்பை உணர்ந்து 15 நாட்களில் மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை தேவை என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.