டிரம்ப் கொடுத்த பதவியை ஏற்க முடியாது என்று கூறிய அதிகாரி
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு நிர்வாக பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் கடற்படையின் புதிய செயலாளராக, அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியும், தனியார் பங்கு நிர்வாகியுமான பிலிப் பில்டன் என்பவரை அவர் தேர்வு செய்தார்.
கடற்படை செயலாளர் பதவிக்கு பிலிப் பில்டனை முறையாக நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பிலிப் அந்த பதவியை ஏற்க முடியாது என்று அதிரடியாக கூறியுள்ளார். டிரம்ப் அரசின் முரண்பட்ட கொள்கையால் அவர் இந்த பதவியை ஏற்க மறுத்த்ததாக கூறப்படுகிறது
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: ‘கடற்படை செயலாளர் பதவியை ஏற்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ததில், தேவையற்ற இடையூறுகள் இன்றியும், எனது குடும்பத்தின் தனிப்பட்ட பொருளாதார நலன்களை சார்ந்தும் அரசின் நெறிமுறைத்தேவையை திருப்திபடுத்த என்னால் முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ராணுவ செயலாளர் பதவிக்கு டிரம்ப்பால் நியமனம் செய்யப்பட்டிருந்த வின்சென்ட் வயோலா என்பவரும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.