ரிலையன்ஸ் ஜியோ குறைந்த கட்டணத்தை நீண்டகாலம் தொடர முடியாது: ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் கருத்து
ரிலையன்ஸ் ஜியோ நிர்ணயம் செய்திருக்கும் கட்டணங்களை நீண்ட நாளைக்கு தொடரமுடியாது என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்திருக்கிறார். மேலும் புதுமையாக கட்டண விகிதங்களை இந்த துறை நிர்ணயம் செய்யும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ரோமிங் கட்டணத்தை ஏர்டெல் முற்றிலும் நீக்கியது குறிப்பிடத்தக்கது.
பார்சிலோனாவில் நடந்த மொபைல் வோர்ல்ட் காங்கிரஸில் கலந்து கொண்ட சுனில் பார்தி மிட்டல் மேலும் கூறியதாவது: பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை பலமாக இருக்கிறது. தொலைத்தொடர்பு துறையில் போட்டி அதிகரித்திருப்பதால், நிறுவனம் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்படாது. ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை. ஆனால் முதல் இரு இடங்களில் இல்லாத பகுதிகளில் நிறுவனத்தை இணைக்கும் திட்டத்தை பார்தி ஏர்டெல் பரிசீலனை செய்யும். வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் வசூலிக்க ஆரம்பிப்பது எங்களை போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு நல்ல செய்திதான். ஆனால் கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கான போட்டி முடிவடையாது. அவர்கள் நிர்ணயம் செய்த கட்டணத்தில் தொடர்ந்து சேவை வழங்க முடியாது.
ஒரு ஜிபி டேட்டாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் மிக மிக குறைவு. இலவச சேவைக்கு பதிலாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
கடந்த அக்டோபர் டிசம்பர் காலாண்டில் நிகர லாபம் 54 சதவீதம் குறைந்து ரூ.503 கோடியாக குறைந்தது. புதிதாக வந்த ஜியோ காரணமாக நிகர லாபம் குறைந்தது என சுனில் மிட்டல் கூறிருந்தார். இந்த நிலையில் தற்போதைய நிலைமை மாறி தொலைத்தொடர்பு துறை இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஓர் ஆண்டு (மார்ச் 2018) ஆகும் என சுனில் மிட்டல் தெரிவித்தார்.