மாசி மாதத்தின் மகத்துவம்!
தமிழ் மாதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மகத்துவம் பெற்றதாகத் திகழ்கிறது. அவ்வகையில் மாசி மாதம் சகல தெய்வங்களுக்கும் உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது.
மாசியில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது சிறப்பு. இந்த மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி விசேஷமானது. அன்று விரதம் கடைப்பிடித்து, விநாயகரை வழிபட, எல்லாவிதமான தோஷங்களும் சங்கடங்களும் விலகும். அதேபோன்று காரடையான் நோன்பு – சாவித்திரி விரதம், மாசி பௌர்ணமியில் வரும் ஹோலிப் பண்டிகை ஆகியன இந்த மாதத்துக்கே உரிய வழிபாடுகள்.
மேலும், மாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திருநாள் கலைவாணிக்கு உகந்த திருநாள் என்கின்றன ஞான நூல்கள். இந்த நாளில், சரஸ்வதி அந்தாதி முதலான துதிப்பாடல்களைப் பாடி, வண்ண மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால், பிள்ளைகள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்.
குறிப்பாக மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத் திருநாள், உன்னதமான பலன்களை அளிக்கவல்லது. சந்திர பகவான் பூரணத்துவமாக தனது கலைகளைப் பொழியும் நாளில், தெய்வங்களை ஆராதித்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது திண்ணம். அந்தவகையில், மாசி மாதத்தில் (பெரும்பாலும்) சந்திரன் பூரணப் பொலிவுடன் திகழும் பெளர்ணமி திருநாள் மக நட்சத்திரத்துடன் இணைந்துவரும். ஆகவேதான், மாசி மகம் ஆன்மிக மகத்துவங்களுக்கு உரியதாகத் திகழ்கிறது.
மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது மிகமிகச் சிறந்தது. புதிதாக ஏதாவது படிக்க விரும்புகிறவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புகிறவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பித்தால் சிறந்து விளங்கலாம்.
மங்கலம் அருளும் அம்பிகை பூஜை
சகல உயிர்களுக்கும் மூலமாகத் திகழும் ஆதிசக்தி அவதரித்தது, ஒரு மாசி மக நன்னாளில்தான். இந்த நாளில் அம்பிகையைக் குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட்டால், நினைத்தது நிறைவேறும்; எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இந்தத் தினத்தில், இல்லத்தில் அம்பாளை ஆவாஹனம் செய்து பூஜிப்பது, பெண்களுக்கு மேன்மையைத் தரும்.
எப்படி பூஜிப்பது என்று தெரிந்துகொள்வோமா?
அன்றைய நாளில் எண்ணெய் ஸ்நானம் அல்லாமல் பெண்கள் தலைக்குக் குளித்துவிட்டு, மடி வஸ்திரங்களை உடுத்திக்கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தைச் சுத்தம் செய்து, கோலங்கள் இட்டு அலங்கரித்து வைத்துக்கொள்ளவும்.
முதலில், விநாயகர் பூஜை. மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து, மலரும் நைவேத்தியமும் சமர்ப்பித்து, தூப-தீப ஆராதனையுடன், எந்தத் தடையும் இன்றி பூஜை இனிதே நடைபெற, முழு முதற் தெய்வமாம் கணபதியை வழிபட வேண்டும். பிறகு, அம்பாள் பூஜையைத் துவக்க வேண்டும்.
உருண்டையான குண்டு மஞ்சளை எடுத்துக்கொண்டு, கீழ் முனையைத் தேய்த்து, உட்காரும் நிலைக்கு ஏற்றவாறு தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர், பித்தளை தாம்பாளம் ஒன்றை எடுத்து, அதற்குச் சந்தன – குங்குமத் திலகமிட்டு, சிறிது அட்சதையைப் பரப்பி, அதன்மீது மஞ்சள் கிழங்கை நிறுத்திவைக்க வேண்டும். இந்த மஞ்சள் கிழங்கையே அம்பாளாகப் பாவித்து வழிபட வேண்டும். அதாவது, அன்றைய சங்கல்ப மந்திரத்தைக் கூறி, மஞ்சள் கிழங்கில் அம்பாளை மானசீகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.
பின்னர், அம்பாளாகத் திகழும் மஞ்சள் கிழங்குக்குச் சந்தனம், குங்குமம், புஷ்பம், வஸ்திரம் (ரவிக்கை துண்டு), பஞ்சு திரி கொண்டு மாலை ஆகியவற்றை சார்த்தி அலங்காரம் செய்ய வேண்டும். தொடர்ந்து, மற்றொரு பித்தளை தாம்பாளத்தில் அம்பாளுக்கான காதோலை, கருகமணி, கண்ணாடி, வளையல்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதையடுத்து, கௌரி அஷ்டோத்திர சதநாமாவளியைக் கூறி, சிகப்பு நிறப் புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அஷ்டோத்திரம் சொல்ல இயலாதவர்கள், தமிழ்த் துதிகளையும் பாடல்களையும் பாடி ஆராதிக்கலாம். பயத்தம்பருப்பு பாயசம், மகா நைவேத்தியம், வடை ஆகியவற்றை நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கலாம்.
தீபாராதனை முடிந்ததும், கன்னிப்பெண்கள் கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி அம்பாளை வணங்க வேண்டும்.
‘காத்யாயினி மஹாமாயே மஹாயோகின்ய தீச்வரி
நந்தகோப சுதம் தேவி பதிம்மே குரு தே நம:
கருத்து: மாயைகளுக்கெல்லாம் இருப்பிடமாக இருப்பவளும், மகத்தான யோக ஸித்திகளை உடையவளும், காத்யாயினி என்று போற்றப்படுபவளுமான தேவியே, உன்னை நமஸ்கரிக்கிறேன். எனக்கு நந்தகோப குமரனான கிருஷ்ணனே (கிருஷ்ணனைப் போன்ற) கணவனாக அமையும் பாக்கியத்தைக் கொடு.
கர்ப்பிணிப் பெண்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்…
‘வாபீதடே வாமபாகே – வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்திதாத்வம்
மாந்யா வரேண்யா வதான்யா – பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூன் ததா பக்த லோகான்’
கருத்து: அழகிய முல்லைக் கொடியுடைய வனத்தில் இருக்கும் தேவியே, கர்ப்பத்திலுள்ள சிசுவையும், என்னையும் (தாய்) ரக்ஷிக்கும் அம்பிகையே, எல்லோராலும் பூஜிக்கப்படுபவளே, வேண்டிய வரத்தைக் கொடுக்கும் தாயே, கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை ரஷிப்பாயாக என்கிற ஸ்லோகத்தைக் கூற வேண்டும்.
இங்ஙனம் துதித்து வழிபட்ட பிறகு, சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள் கிழங்குடன், நாணயம் மற்றும் மாதுளம்பழம் வைத்துத் தர வேண்டும். மேற்கொண்டு வைத்துக்கொடுப்பது அவரவர் சௌகர்யம்.
மாசி மகத்தில் மாதவன் வழிபாடு!
இந்த நன்னாளில் மாணவர்கள் மாதவனை வழிபட வேண்டும். அவர்கள், மஞ்சள் கிழங்கை மாதவனாகப் பாவித்து வழிபட வேண்டும்.
மஞ்சள் கிழங்குக்குச் சந்தனம் – குங்குமம் திலகமிட்டு, பஞ்சு வஸ்திரம் சார்த்தி, துளசி தளங்களைக்கொண்டு, விஷ்ணு அஷ்டோத்திர சத நாமாவளியைப் படித்து, பூஜிக்க வேண்டும் அல்லது ஆழ்வார் பாசுரங்களைப் பாடி வழிபடலாம்.
நைவேத்தியமாக வழக்கமான பதார்த்தங்களுடன் நெய்யில் பொரித்த அப்பத்தைச் சமர்ப்பித்து வழிபடுவது விசேஷம். உங்கள் வீட்டுக் குழந்தைகள் சிறுவயதினர் எனில், அவர்களை அருகில் வைத்துக்கொண்டு வீட்டுப் பெரியவர்கள் பூஜையை எடுத்துச் செய்யலாம்.
பூஜைக்குப் பிறகு மாணவர்கள் சொல்லவேண்டிய ஸ்லோகம்:
‘பக்திம் சக்திம் விரக்திம் ச புத்திம் முக்திம்ச யுக்தித
ஹரே மே தேஹி தைத்யாரே ஹரே நர ஹரே யதா’
கருத்து: அசுரர்களுக்கு சத்ருவானவரே, நரசிம்ம மூர்த்தியே, விருகாசுரனை வதம் செய்தவரே, ஹரியே, எனக்குப் பக்தி, புத்தி, யுக்தி, சக்தி, வைராக்கியம், போகம், மோக்ஷம் எல்லாவற்றையும் அருள்வாயாக.
மேலும், இந்தத் தினத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது, மேன்மையான பலன்களைத் தரும் என்பதில் ஐயமில்லை. மாசி மகத்தன்று யார் யாருக்கு என்ன குறை உள்ளதோ, அதை பகவானிடத்தில் சமர்ப்பித்தால், குறைகள் நீங்கி, சர்வாபீஷ்டங்களும் கைகூடும்.