ஓபிஎஸ் அணி-தீபா பேரவை இணைய வாய்ப்பு உள்ளதா?
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் சசிகலா ஆதரவாளர்களை எதிர்ப்பதுதான் ஓபிஎஸ் அணி மற்றும் தீபா பேரவையின் கொள்கையாக இருந்தாலும், தலைமை பொறுப்பில் யார் இருப்பது என்பதில் முரண்பாடு உள்ளதாக தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் பதவி ஆகிய இரண்டுமே தனக்கு வேண்டும் என்று தீபா பிடிவாதமாக இருந்ததால்தான் ஓபிஎஸ் அணி, தீபாவை கண்டுகொள்ளவில்லை என்றும் இதனால் ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்கவே அவர் தனி பேரவையை தொடங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
தீபா ஒருவேளை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நின்றால் ஓபிஎஸ் அணி ஆதரவு தெரிவிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், ஓபிஎஸ் அணியும் தீபா பேரவையும் இப்போதைக்கு இணையும் வாய்ப்பு இல்லை என்றே ஓபிஎஸ் அணியின் சீனியர் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இன்னும் ஒருசில நாட்களில் சசிகலா பொதுச்செயலாளர் குறித்த பிரச்சனைக்கு தேர்தல் ஆணையம் சரியான முடிவை எடுக்கும் என்றும் அதன் பின்னர் அதிமுக ஓபிஎஸ் வலு பெற்று உண்மையான அதிமுகவாக திகழ்வதோடு, இரட்டை இலை சின்னமும் கிடைத்துவிடும் என்றும் ஓபிஎஸ் அணியினர் நம்புகின்றனர். அப்போது எந்தவிதமான நிபந்தனையும் இன்றி தீபா இணைத்து கொள்வார் என்றும் இல்லையெனில் ஓபிஎஸ் அணியினரால் தீபா கண்டுகொள்ளப்பட மாட்டார் என்றே கூறப்படுகிறது