தயாரிப்பாளர் சங்க தேர்தல். விஷால் அணி கொடுத்துள்ள வாக்குறுதிகள்
நடிகர் சங்கத்தை அடுத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்தான். இந்த தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் மொத்தம் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. ஐந்து அணிகளில் இருந்து தலைவர் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் புதிய அணியாக உருவாகியிருக்கும் விஷால் தலைமையிலான அணி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது வாக்குறுதிகளை அறிவித்தது. இந்த வாக்குறுதிகள் பின்வருமாறு:
வெளியிட முடியாமல் இருக்கும் படங்களை வெளியிடவும், அனைத்து படங்களுக்கும் சாட்டிலைட் உரிமம் மூலமாக லாபம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்
அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வந்து சேர வேண்டிய கேபிள் TV வருமானத்தை சரி செய்து, மாதா மாதம் அனைத்து தயாரிப்பாளர்கள் பயன்படும் வகையில் வருமானம் ஈட்டித் தரப்படும்
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாங்க மானியத்தை மாநில அரசுடன் நட்புறவுடன் பேசி தயாரிப்பாளர்களுக்கு சேர வேண்டிய மானியத்தை பெற்றுத்தரப்படும்
சிறிய படம், பெரிய படம் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து பிரச்சினைகளும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும்
நலிந்த தயாரிப்பாளர்கள்’ என்ற வார்த்தை தயாரிப்பாளர் சங்க வரலாற்றில் இருந்து அகற்றப்படும்
அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வீட்டு மனை வழங்கப்படும். இதற்கான நிதி சங்க வைப்பு நிதியில் இருந்து எடுக்காமல் புதிய வருவாய் மூலமாகவே நிறை வேற்றப்படும்
யார் எந்த அணி என்ற பாரபட்சம் இல்லாமல், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன் தொகைரூ.5,000/- ல் இருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தப்படும்
தீபாவளி பரிசு ரூ.10,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்
பொங்கல் பரிசு ரூ.5,000/- ரொக்கமாக அனைத்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ஒரு வாரம் முன்பாகவே செலுத்தப்படும்
சங்க உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி நிறுவனர்களில் இலவச கல்வி பெற வழிவகை செய்யப்படும்
முந்தைய நிர்வாகிகளைப்போல் சுயநல நோக்கோடும், தொலைநோக்குப் பார்வை அற்றவர்களாகவும் செயல்பட மாட்டோம்
ஒரு வருடத்திற்குள் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் அனைத்து நிர்வாகிகளும் . இல்லையேல் ராஜினாமா செய்துவிடுவோம்