புடலங்காய் காரக்கறி
சிலர் குறிப்பிட்ட சில காய்கறிகளை மட்டுமே தொடர்ந்து சமைப்பார்கள். மற்ற காய்கறிகளில் சுவை இருக்காது என்பது பலரது நினைப்பு. இன்னும் சிலர் புடலை, பீர்க்கு போன்றவற்றைத் தங்கள் சமையலில் ஒதுக்கிவிடுவார்கள். கூட்டு தவிர, இவற்றில் சுவையாக வேறெதுவும் செய்ய முடியாது என்று காரணமும் சொல்வார்கள். “நம் மண்ணில் விளைகிற காய்கறிகளைச் சாப்பிடுவதுதான் உடலுக்கு நல்லது. புடலங்காயில் நீர்ச்சத்து நிறைந்து இருப்பதால் வெயில் காலத்துக்கு உகந்ததும்கூட” என்று சொல்கிறார் சென்னை கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த வரலட்சுமி முத்துசாமி. புடலங்காயில் விதவிதமாகச் சமைக்கக் கற்றுத் தருகிறார் இவர்.
புடலங்காய் காரக்கறி
என்னென்ன தேவை?
புடலங்காய் – 1
மிளகாய்த் தூள், கரம் மசாலா – தலா ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 2
வறுத்த வேர்க்கடலைப் பொடி – அரை கப்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புடலங்காயை இரண்டாகப் பிளந்து விதையை நீக்கிவிடுங்கள். புடலங்காயைப் பெரிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் ஊற்றி முக்கால் பதத்துக்கு வேகவையுங்கள். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். அதனுடன் வேகவைத்த புடலங்காய், மிளகாய்த் தூள், கரம் மசாலா, தனியாத் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள். வதங்கியதும் வேர்க்கடலைப் பொடியைத் தூவிப் புரட்டியெடுத்தால் புடலங்காய் காரக் கறி தயார்.