தமிழக மீனவர் படுகொலை எதிரொலி. இலங்கை தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு
இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர்களின் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரிட்சோ என்ற மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு ராமேஸ்வரம் மருத்துமனையில் 4 பேர் கொண்ட மருத்துவக்குழு பிரேத பரிசோதனை நடத்தி வருகிறது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் தமிழக மீனவரின் படுகொலை காரணமாக ராமேஸ்வரம் பகுதி மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே ஒருவித அசாதாரண சூழல் இருப்பதால் தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு தமிழக போலீஸ் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது. வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்க, தமிழகத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம், இலங்கை வங்கிகள், சென்னை எழும்பூரில் உள்ள புத்தக விஹார் ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக போலீஸ் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது.
மீனவர் பலியான கோபம் இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வங்கிகள் மீது பொதுமக்களுக்கு திரும்பும் என்ற ஊகத்தில் தமிழக அரசு இந்த பாதுகாப்பை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.