மு.க.ஸ்டாலினுக்கு இந்த அரசியல் தேவையா? நெட்டிசன்கள் கருத்து
அறிஞர் அண்ணா காலத்தில் இருந்து அரசியல் செய்து வரும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் கொள்கைகளை அடுத்த தலைமுறையினர்களுக்கு கொண்டு சென்று அரசியல் நடத்தி வரும் நிலையில் நேற்று அரசியலுக்கு வந்த டிடிவி தினகரனிடம் விமர்சனம் பெற்று வருவதால், அவருக்கு இந்த அரசியல் தேவையா என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அரசியல் அனுபவம் உள்ளவர்களை எதிர்த்து அரசியல் செய்வதே ஒரு பெருமைதான் என்ற நிலை மாறி தற்போது சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளதே என மு.க.ஸ்டாலினே வருத்தப்படுவதாக அதே நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர்,.
இந்நிலையில் ‘குற்றவாளிகளால் நடத்தப்படும் அரசு’ என்று மு.க. ஸ்டாலின், ‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை விமர்சனம் செய்தார். இதற்கு பதிலளித்துள்ள டிடிவி தினகரன், ‘குற்றவாளிக் கூடாரத்தில் இருந்து கொண்டு மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தமது அறிக்கையில், ‘விஞ்ஞானத் திருடர்கள் என்று அப்போதைய நீதியரசர் சர்க்காரியாவால் விளிக்கப்பட்டவர்கள் யார் என்பதும்; எங்கே அந்த சர்க்காரியா விசாரணை அறிக்கை வழக்காக மாறிவிடுமோ என்று அஞ்சி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் காலைப் பிடித்து, கூடவே கச்சத்தீவு, காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளையெல்லாம் காவு கொடுத்து, தங்களை தற்காத்துக் கொண்டவர்கள் யார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்’ என்று கூறியுள்ளார்
மேலும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் ‘அ’திமுக பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து சாதனை செய்துள்ளதாக கூறினார். அதாவது நீரில் ஒரு ஊழலென பழைய வீராணத்திலும்; நெருப்பில் ஒரு ஊழல் நிலக்கரி இறக்குமதியிலும்; காற்றில் ஒரு ஊழல் என பூச்சி மருந்து தெளிப்பதிலும்; நிலத்தில் ஒரு ஊழலென மஸ்டர் ரோல் உள்ளிட்ட ஏராள ஊழல்களிலும்; ஆகாயத்தில் ஊழல் என அலைக்கற்றையிலும், இப்படி பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து லஞ்ச லாவண்யங்களில் தங்க மெடல் வாங்கிய குடும்பம் யாருடைய குடும்பம் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.