திமுகவின் ஆர்.கே.நகர் வியாபாரம் தொடங்கியது
தேர்தல் அறிவித்தால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்கும் முன்னர் ஒரு மிகப்பெரிய வசூலை ஆரம்பித்துவிடும். தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து விண்ணப்ப படிவம் வாங்க வேண்டும், பின்னர் அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்கொரு விண்ணப்ப கட்டணம் கட்ட வேண்டும். ஒரு ரூபாய் மதிக்கத்தக்க விண்ணப்பம் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு பின்னர் ஆயிரக்கணக்கில் கட்டணம் பெற்று இதில் பலகோடிகளை வருமான பார்த்து வருகிறது அரசியல் கட்சிகள்.
இந்த நிலையில் நேற்று ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் திமுக தனது தேர்தல் வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.1000 கொடுத்து விண்ணப்ப படிவத்தை வாங்க வேண்டும் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை ரூ.25000 கட்டணமாக செலுத்தி தலைமை அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும் என்றும் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
தேர்தலில் திமுகவின் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ? திமுக தேர்தல் வியாபாரத்தில் கோடிக்கணக்கில் வசூல் செய்து வென்றுவிட்டதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.