இப்படித்தான் இருக்க வேண்டும் பெட்ரூம்!
வீட்டில் பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும், எப்படித் தூய்மையாகவும் அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால், படுக்கை அறைக்கு அப்படி முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், ஸ்கூல் பேக் முதல், லேப்டாப், டி.வி ரிமோட், அழுக்குத்துணி என சகலமும் படுக்கை அறையில்தான் வசித்துக்கொண்டிருக்கும்.
பூஜை அறைக்கு இணையாக, படுக்கை அறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. ஏனெனில், தூக்கம் நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியங்களுள் தவிர்க்க இயலாத ஒன்று. ஒரு நாள் தூக்கம் கெட்டுப்போனாலும் மறுநாள் எந்த வேலையும் இயல்பாக இருக்காது.
படுக்கை அறையில் இருக்க வேண்டியவை!
படுக்கை அறையில் என்ன இருக்க வேண்டும் என்று கேட்டால், படுக்கை மட்டும்தான் இருக்க வேண்டும். படுக்கை அறையைத் தூக்கத்துக்கும் குடும்ப உறவு வலுப்படவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற பொருட்கள் படுக்கை அறையில் இருப்பது தூக்கமின்மைக்கும், குடும்பத்தில் அமைதியின்மைக்கும் வழிவகுத்துவிடும்.
படுக்கை அறையில் டி.வி வைப்பது தவறான பழக்கம். குறைந்தபட்சம் தூங்குவதற்கு அரை மணிநேரம் முன்பாவது டி.வி, மொபைல் உள்ளிட்ட ஒளிர்திரைகளைப் பார்க்காமல் இருக்க வேண்டும். அப்போதுதான் கண்களுக்கு முழு ஓய்வு கிடைக்கும். நரம்புகள் சீராக இயங்கும். ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பவர்கள், புத்தகங்களைப் படுக்கை அறைக்கு உள்ளே அனுமதிக்கக் கூடாது. படுத்துக்கொண்டே புத்தகம் படிப்பது கண்களுக்கும் நல்லது அல்ல. படுக்கை அறையில் நூலகம் என்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல. எனவே நூலகம், வீட்டில் வேறு எங்காவது இருக்கட்டும்.
தூங்குவதற்கு முன் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால், ஹாலில் அல்லது வேறொரு அறையில் அமர்ந்து படித்துவிட்டு, குறித்த நேரத்தில் படுக்கைக்குத் திரும்ப வேண்டும்.
நள்ளிரவில் தூக்கம் கலைந்தால், படுக்கையில் இருந்தபடியே செல்போனை எடுத்துப் பார்ப்பது, புத்தகத்தைப் பிரித்துப் படிப்பது, டி.வி பார்ப்பது போன்றவை தவறான பழக்கங்கள். வேறொரு அறைக்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்து புத்தகம் படித்துவிட்டோ, வெறுமனே அமர்ந்துவிட்டோ வரலாம். பாதித் தூக்கத்தில் எழுந்து செல்போன், டி.வி பார்க்கக் கூடாது.
தூக்க மாத்திரைகள் போன்றவற்றையும் படுக்கைக்கு அருகில் வைத்திருக்கக் கூடாது. சிலர், சற்று தூக்கம் வராமல் இருந்தாலும் தூங்க முயற்சிக்காமல், மாத்திரை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிடுவார்கள். இதனால், மாத்திரை எடுத்துக்கொண்டால்தான் தூக்கம் வரும் என்ற பழக்கம் வந்துவிடும்.
படுக்கை அறையில் நேர்மறையான அதிர்வலைகள் இருப்பது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக விவாதிப்பது, வாதம் செய்வது போன்றவற்றைப் படுக்கை அறையில் வைத்துக்கொள்ள வேண்டாம். இது அந்த இடத்தின் நல்ல அதிர்வுகளைக் கெடுக்கும். படுக்கை அறையில் சண்டை போடவே கூடாது.
முடிந்தவரை படுக்கை அறை பகலில் நன்கு வெளிச்சமாகவும் இரவில் இருட்டாகவும் இருப்பது நல்லது. ஜன்னல்கள், படுக்கை, தலையணை உறைகள் எல்லாம் அதற்கு ஏற்றது போல் இருக்க வேண்டும். அடர்ந்த இருளில் தூங்கும்போதுதான் நம் உடலில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் சுரக்கும்.
படுக்கை அறையில் லேப்டாப்பில் வேலை செய்வது, நொறுக்குத் தீனி சாப்பிடுவது போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
படுக்கை அறையின் சுவர், அமைதியைத் தரக்கூடிய வெளிர் நிறங்களாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் புகைப்படங்கள், ஓவியங்கள் வைக்கலாம். அமைதி, மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், புகைப்படங்களை வைக்கலாம்.
வெளியில் இருக்கும் சப்தங்கள் படுக்கை அறையினுள் கேட்காமல் இருந்தால் நல்லது. அமைதியான இனிமையான இசையைக் கேட்டாலே தூக்கம் வந்துவிடும்.
மொத்தத்தில், படுக்கை அறையைத் தூங்குவதற்கு மட்டும் உபயோகித்தாலே போதும், தூக்கம் எந்த விதத்திலும் பாதிக்காது.