வீட்டுக் கடனை இப்போது அடைக்கலாமா?

வீட்டுக் கடனை இப்போது அடைக்கலாமா?

வீட்டுக் கடன் வாங்கி, சொந்த வீடு வாங்குபவர்களுக்கு அந்தக் கடன் சுகமான சுமை என்று சொல்லக் கேட்டிருப்போம். உண்மைதான். ஆனால், அந்தக் கடனையும் முழு தவணைக் காலம் அல்லாமல் முன்கூட்டியே கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்துவது சுகமான சுமையைக் குறைக்கும். அதற்கான சூழல் இப்போது நிலவுகிறது என்பதுதான் வீட்டுக் கடன்தாரர்கள் அறிய வேண்டிய சங்கதி.

உயர் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பொதுத்துறை வங்கிகள் தொடங்கி, தனியார் வணிக வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள் அனைத்துமே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. இதனால் தற்போது வீட்டுக் கடன் வட்டி விகிதம், மிகவும் குறைவாக உள்ளது. இதன் மூலம் புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில், வீட்டுக் கடன் கிடைக்கும் சூழல் உள்ளது. ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றவர்களுக்கும் இதனால் பலன் கிடைத்திருக்கிறது. பழைய கடன்தாரர்களுக்குத் தவணைக் காலம் குறைந்திருக்கிறது. தவணைக் காலம் குறைந்தால் மட்டும் போதுமா? உங்கள் வீட்டுக் கடன் சுமையும் குறைய வேண்டுமல்லவா?

அதற்கு வீட்டுக் கடன் மொத்தத் தொகையின் ஒரு பகுதியை முன் கூட்டியே செலுத்துவதன் மூலம் அந்தச் சுமையைக் குறைக்கலாம். எப்படி? பொதுவாக வீட்டுக் கடன் மாதத் தவணை, மாதச் சம்பளக்காரர்களின் வருவாயில் பாதியை எடுத்துக் கொள்ளும். பொதுவாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் அசல் தொகையைக் குறைக்கலாம். அப்படிக் குறையும்போது அந்த அசல் தொகைக்கேற்ப வட்டியைக் கணக்கிட்டு மாதத் தவணை நிர்ணயிக்கப்படும். இப்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைந்திருப்பதால் நிர்ணயிக்கப்படும் தவணைத் தொகை குறையும். இதனால் வட்டித் தொகையும் குறைகிறது. இது வீட்டுக் கடன்தாரர்களுக்கு ஓரளவு நன்மை தரக்கூடிய விஷயம்.

பொதுவாக வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறையும் போதெல்லாம் வங்கிகள் தவணைத் தொகையைக் குறைப்பதில்லை. தவணைக் காலத்தைத்தான் குறைக்கின்றன. தவணைக் காலம் குறைவதும், முன்கூட்டியே செலுத்தப்படும் தொகையால் தவணைத் தொகை குறைவதும் வீட்டுக் கடனை அடைக்க ஏதுவாகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. எந்தக் கட்டத்திலும் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை.

இப்போது குறைக்கப்பட்டுள்ள வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் இன்னும் சில காலாண்டுகளுக்கு நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், வீட்டுக் கடனில் ஒரு பகுதியையோ அதற்கும் மேலேயோ திருப்பிச் செலுத்துவது தொடர்பாகத் திட்டமிட இது மிகமிக சரியான தருணம். ஒரு வேளை எதிர்காலத்தில் வட்டி விகிதம் உயரவும் செய்யலாம். ஏற்கெனவே ஒரு தொகையைச் செலுத்தி, அசலைக் கடன்தாரர்கள் குறைத்திருந்தால், வட்டி விகிதம் உயர்ந்தாலும்கூடச் சுமையின் பாதிப்பு குறைவாகவே இருக்கும்.

மேலும் முன்கூட்டியே செலுத்தப்படும் தொகையால் குறையும் அசல் தொகை மற்றும் வட்டி விகிதம் மூலம் செலுத்தப்படும் தொகை குறைந்து, உபரித் தொகை கிடைக்கும் அல்லவா? அந்தத் தொகையைச் செலவு செய்யாமல், வேறு விஷயங்களுக்குத் திட்டமிடாமல் சேமித்து ஓரிரு ஆண்டுகள் கழித்துத் திரும்பவும் வீட்டுக் கடனுக்கான அசலைக் குறைக்க முன்கூட்டியே செலுத்தலாம். இதனால், வீட்டுக் கடன் வெகு விரைவாக அடைக்க வாய்ப்பு கிடைக்கும்.

எப்போதுமே வீட்டுக்கடனுக்கான தொகையில் ஒரு பகுதியை, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செலுத்துவது, கடன் சுமையைக் குறைப்பதற்கான உத்தியாக வங்கிகள் பரிந்துரைக்கின்றன. அதற்கான சூழல் இன்னும் அதிகரித்துள்ள நிலையில், அந்தத் திட்டமிடலை இப்போதிருந்து தொடங்குங்களேன்!

Leave a Reply