ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியீடு
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 2015 மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.
எழுத்து தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு இடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில், நேர்முக தேர்வு நடத்தப்படும். அதில், அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, பணி ஒதுக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ‘எழுத்து தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடா விட்டால், முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும்’ எனக்கூறி, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற சதீஷ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, நீதிபதி ஹரிபரந்தாமன் விசாரித்து, 2015, ஆகஸ்ட் 7ல் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், கடைநிலை பணிகளுக்கு, நேர்முக தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை; தேவை என்றால், எழுத்து தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்ணை, மொத்தமாக கணக்கிட்டு, அதன்படி, இறுதி முடிவு அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் இருந்த எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட்டு இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என கல்வித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.