வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டு புரளி. அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது. இதனால் டிரம்ப்புக்கு எதிரானவர்களால் அவருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம போன்கால் ஒன்று அதிபரின் டிரைவருக்கு வந்தது.
உடனடியாக வெள்ளை மாளிகையில் உள்ள கார்களை அதிரடிப்படையினர் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் இல்லாததால் அந்த போன்கால் ஒரு மிரட்டல் அழைப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த விசாரணையில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.