கல்லூரி கனவில் இருக்கும் மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு!!!

கல்லூரி கனவில் இருக்கும் மாணவர்களின் முக்கிய கவனத்திற்கு!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் கல்லூரி கனவுகளில் மிதப்பார்கள். கல்லூரி வாழ்க்கை என்பது ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய அனுபவம். இந்த அனுபவம் கடைசி வரை ஞாபகத்தில் இருக்கும் ஒரு பொற்காலம். ஆனால் அதே சமயத்தில் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்வதில் மிக கவனமாக இருக்க வேண்டும்

பல மாணவர்கள் அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு துன்பத்தில் உள்ளனர். அந்த கஷ்டம் இனி எந்த ஒரு மாணவருக்கும் ஏற்பட கூடாது. இந்நிலையில் யூ.ஜி.சி மற்றும் ஏ.ஐ.சி.டி.இ அமைப்பு இந்தியா முழுவதும் உள்ள போலி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை தங்களது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளன. இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில் இந்தியாவில் மொத்தம் 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதாம். குறிப்பாக, போலி கல்வி நிறுவனங்கள் தலைநகர் டெல்லியில்தான் அதிக உள்ளதாம். அதாவது அங்கு மொத்தம் 66 கல்லூரிகள் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள 23 போலி பல்கலைக்கழகங்களில் ஏழு பல்கலைக்கழகங்கள் டெல்லியில் தான் உள்ளது என யூஜிசி குறிப்பிட்டுள்ளது.

இந்த கல்லூரிகள் அனைத்தும் டிகிரி சான்றிதழ்களை வழங்க தகுதியற்ற நிறுவனங்கள் என்பதால் இவை வழங்கும் சான்றிதழ்கள் போலியானவை மட்டுமின்றி வேலைவாய்ப்புகளுக்கு பயன்படுத்த தகுதியற்றவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மஹாரஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் போலி கல்வி நிறுவனங்கள் அதிகளவு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, மாணவர்கள் சரியான கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்றும், போலி கல்லூரிகளின் விபரம் குறித்த விபரங்களை www.ugc.ac.in, www.aicte-india.org ஆகிய இணையதளங்கள் சென்று கண்டறிந்து அந்த நிறுவனங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply